21 நாள் முடக்க நடவடிக்கையினை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
New Delhi: கொரோன தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் 21நாட்கள் முழு முடக்கக் கட்டுப்பாட்டினை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த முழு முடக்க நடவடிக்கையின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சமூக விலகல் குறித்த அவசியத்தினை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த முழு முடக்க நடவடிக்கையினை மீறுபவர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த நடவடிக்கையின் காரணமாக மக்கள் என் மீது அதிருப்தி கொண்டிருக்கலாம். ஆனால், இந்த வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற இது ஒன்றுதான் வழி. என பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
"பலர் இன்னும் முடக்க நடவடிக்கையை மீறுகிறார்கள் ... இது வருத்தமாக இருக்கிறது ... உலகம் முழுவதும் பலர் இதே தவற்றைச் செய்தார்கள் ... இந்த நடவடிக்கையை மீறுபவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள்," என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 194 புதிய தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இந்த புதிய எண்ணிக்கைகள் இத்தாலி போன்ற பாதிப்பை இந்தியா எதிர்கொள்ளத் தயாராகிறதா என்கிற கேள்வியை எழுப்பியிருந்தது.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தற்போது முடக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கொடிய தொற்றுக்கு எதிரான போரில் நாங்கள் மீண்டும் பலமாக எழுச்சியை முன்னெடுப்போம் என்று பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.