கடந்த 2016, செப்டம்பர் 29 அன்று இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் தங்கி இருந்த இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தியது.
New Delhi: சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், அதைச் சுற்றியுள்ள விவாதம் இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இது குறித்து பேசிய மோடி, ‘பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த ராணுவம் என்னிடம் தெரிவித்தபோது, நான் சொன்னது ஒரேயொரு விஷயம்தான். காலை விடிவதற்குள் அனைவரும் பத்திரமாக வந்துவிடுங்கள் என்றேன்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, திரும்ப வந்துவிட வேண்டும் என்று மட்டும் தெரிவித்தேன். உரியில் நமது ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு எனக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் பெருங்கோபம் உருவானது. அப்போதுதான் ஸ்டிரைக் குறித்து விவாதித்தோம். அது மிகப் பெரிய ரிஸ்க் என்பது எனக்குத் தெரியும். எனது அரசியல் ரிஸ்க் குறித்து நான் கவலைப்படவில்லை. எனது மிகப் பெரிய கவனம், நாட்டுக்காக தங்களது உயிரையே கொடுக்கத் துனியும் ராணுவ வீரர்கள் மீண்டும் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்பது மட்டும்தான்' என்று விளக்கமாக பேசியுள்ளார்.
கடந்த 2016, செப்டம்பர் 29 அன்று இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் தங்கி இருந்த இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தியது. உரி பகுதியில் இந்திய ராணுவத்தின் இடத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இந்தியாவுக்குள் ஊடுருவ இருந்த தீவிரவாதிகள் பலரை இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்பில் சொல்லப்பட்டது.