இந்திய அணியின் தோல்வியால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரையிறுதியில் வெற்றிபெற இந்தியா கடுமையாக போராடியதாக பாராட்டியுள்ள பிரதமர் மோடி, வெற்றியும் தோல்வியும் சகஜம்தான் என்று தெரிவித்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி, நியூசிலாந்தின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தியது.
46.1 - வது ஓவரின்போது நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்று ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது. இதில் 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்தது.
240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்ததாக களம் இறங்கினர். தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ரோகித் சர்மா, அடுத்து வந்த கோலி ஆகியோர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பந்த் சிறிது நேரம் நீடித்தார் 32 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவரும் ஹர்திக் பாண்டியாவும் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தனர். 62 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்திக் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் தோனி - ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். நிதானமாகவும், அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்ததால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால், நம்பிக்கையற்றுக் கிடந்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 116 ரன்களை குவித்தனர். இதன்பின்னர், போல்ட் பந்து வீச்சில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஜடேஜா வெளியேறினார்.
59 பந்துகளை சந்தித்த அவர் 77 ரன்களை குவித்தார். இவற்றில் தலா 4 சிக்ஸரும், ஃபோரும் அடங்கும். அடுத்ததால் 50 ரன்கள் தோனி எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் அணியின் வெற்றிக்காக இந்திய அணி கடுமையாக போராடியது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
இந்திய அணியின் தோல்வி அதிருப்தி அளிக்கிறது. இருந்தாலும் வெற்றி பெறுவதற்காக கடைசி வரையில் வீரர்கள் கடுமையாக போராடினர்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்தியா சிறப்பாக விளையாடி நமக்கு பெருமை சேர்த்துள்ளது.
வெற்றியும், தோல்வியும் நம் வாழ்க்கையில் சகஜம்தான். வருங்காலத்தில் வெற்றிகளை குவிப்பதற்கு இந்திய அணியை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.