Kathmandu: பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாள தலைநகர் காத்மண்டுவுக்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டு நாட்கள் நீடிக்க உள்ள இந்தப் பயணத்தில், இன்று மதியம் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியுடன் உணவருந்த உள்ளார் மோடி. பிம்ஸ்டெக் மாநாட்டுக்கான தொடக்க விழா இன்று மாலை நடைபறும். அதைத் தொடர்ந்து நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, பல நாட்டுத் தலைவர்களுக்கும் இரவு விருந்தளிப்பார். இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, மியான்மர் நாட்டுத் தலைவர் வின் மின்ட் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நேபாள பிரதமர் ஷர்மா ஒலியுடன் இரு நாட்டு உறவு குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம், மியான்மர், இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து மற்றும் பூட்டான் ஆகிய 7 நாடுகள் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளும். இந்த மாநாட்டின் நோக்கம், ‘அமைதியாக, வலமாக வங்க கடலை நிர்வகிப்பது’ ஆகும்.
லைவ் அப்டேட்ஸ்:
காலை 10:16: ‘பிரதமர் நரேந்திர மோடி, சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் காத்மண்டுவில் தரை இறங்கினார். இன்று நடக்கவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் அவர் பங்கேற்பார்’ என்று பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது.
காலை 9:50: பிரதமர் நரேந்திர மோடி, நேபாளம் வந்தடைந்தார். அவரை அந்நாட்டு ராணுவத் துறை அமைச்சர் இஷ்வர் பொக்ரெல் வரவேற்றார்.
காலை 9:42: பிரதமர் மோடி நேபாளத்துக்கு புறப்படுவதற்கு முன்னர், ‘நேபாள பிரதமர் ஷர்மா ஒலியைச் சந்தித்து கடந்த ஆண்டு இரு நாட்டுகளுக்கும் இடையில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டறிய ஆர்வமாக இருக்கிறேன். மேலும், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாட்டுத் தலைவர்களை சந்தித்து உரையாட எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்’ என்றார்.
காலை 9:41: பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பது குறித்து நேற்று பேசிய மோடி, ‘நம் அண்டை நாடுகளுடன் நாம் எந்த அளவு பிணைப்புடன் இருக்கிறோம் என்பதை இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்’ என்றார்.
காலை 9:40: 4வது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேபாளம் வந்தார்.