Nirbhaya case: அக்ஷய் தாக்கூர், 31, பவண் குப்தா, 25, வினய் ஷர்மா, 26 மற்றும் முகேஷ் சிங், 32 ஆகிய 4 குற்றவாளிகளும் இன்று காலை 5:30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்
ஹைலைட்ஸ்
- இன்று காலை 5:30 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்
- 2012 ஆம் ஆண்டு நிர்பயா, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்
- சம்பவத்திற்குப் பிறகு நிர்பயா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்
New Delhi: Nirbhaya case: நிர்பயா வழக்கின் குற்றவாளிகளின் 4 பேரும் இன்று காலை தூக்கிலிடப்பட்டனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
அக்ஷய் தாக்கூர், 31, பவண் குப்தா, 25, வினய் ஷர்மா, 26 மற்றும் முகேஷ் சிங், 32 ஆகிய 4 குற்றவாளிகளும் இன்று காலை 5:30 மணிக்குத் தூக்கிலிடப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு டெல்லியில், மருத்துவ மாணவி நிர்பயாவை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவர்கள் இன்று தூக்கிலிடப்பட்டனர்.
இன்று காலை குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் அவர்களின் உடல்கள் தொங்கவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து மருத்துவர் ஒருவர், அவர்கள் இறந்ததாக அறிவித்தார்.
குற்றவாளிகளின் உடல்கள் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு 5 நபர்கள் கொண்டு குழு உடல்களுக்குப் பிரேதப் பரிசோதனை செய்யும்.
குற்றவாளிகள், கடைசிக்கட்ட முயற்சியாக நேற்றிரவு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆவணங்கள் சரிவரத் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றவாளிகளைப் பாகிஸ்தான் அல்லது சீனா எல்லைக்கு அனுப்பி விடுங்கள். ஆனால் அவர்கள் தூக்கிலிட்டு விடாதீர்கள் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதனை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தைக் குற்றவாளிகள் தரப்பு அணுகியது. அங்கும் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதையடுத்து இன்று காலை சரியாக 5.30-க்கு குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
டிசம்பர் 16, 2012-ல், 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா, டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதன் காரணமாக, பெண்கள் பாதுகாப்புக்காகப் பல சட்டங்களையும், சட்ட மாறுதல்களையும், திட்டங்கள் உருவாக்கத்தையும் கொண்டு வந்தது அரசு.
வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் சிறுவர் ஆவார். அவர் 3 ஆண்டுகள் சிறார் காப்பகத்தில் தண்டனையை முடித்துக்கொண்டு வெளியேறினார். இன்னொரு குற்றவாளி நீதிமன்றத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள, இன்று காலையில் மீதமுள்ள 4 பேருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி, “நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பையும் மாண்பையும் உறுதி செய்வது மிக முக்கியமானது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்கள் முன்னேற்றத்துக்கான தேசத்தைக் கட்டமைக்க வேண்டும். அதில் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்,” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.