This Article is From Nov 18, 2019

'நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமைய ஒத்துழைப்பு தாருங்கள்' - பிரதமர் வலியுறுத்தல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. டிச.13ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் ஜம்மு - காஷ்மீரில் அரசியல் தலைவர்களை தொடர்ந்து காவலில் தடுத்து வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் பிரதமர் மோடி.

New Delhi:

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமைய அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து விவகாரங்கள் குறித்தும், திறந்த மனதுடன் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் வெளிப்படையான, ஆக்கப்பூர்வமான விவாதங்களை இந்த கூட்டத் தொடரில் எதிர்பார்க்கிறோம். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கேற்றும் கூட்டம் ஆக்கப்பூர்வமாக அமைய ஒத்துழைக்க வேண்டும். 

2019-ம் ஆண்டின் கடைசி கூட்டத் தொடர் இதுவாகும். மாநிலங்களவையில் 250-வது கூட்டத் தொடர் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

எதிர்வரும் 26-ம்தேதியை அரசியலமைப்பு சட்ட நாளாக அனுசரிக்க உள்ளோம். ஏனென்றால் அன்றைய தேதியுடன் அரசியலமைப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 
இவ்வாறு மோடி பேசினார். 

டிச.13ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் ஜம்மு - காஷ்மீரில் அரசியல் தலைவர்களை தொடர்ந்து காவலில் தடுத்து வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது. 
இதேபோல், மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத நிலையில் அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, சிவசேனா, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டு வரும் நிலையில், அம்மாநில விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. 

முந்தைய கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியாத குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தற்போதைய கூட்டத் தொடரில் மீண்டும் அறிமுகப்படுத்தி, அதனை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயலாற்றும் என்று கூறப்படுகிறது. இது, மாநிலங்களவையின் 250வது கூட்டத் தொடராகவும் விளங்குகிறது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் 2-ஆவது கூட்டத் தொடராகும். முதல் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 17-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது, உடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் மசோதா, தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. 

இதேபோல், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான தீா்மானமும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதாவும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. 
 

.