உடற்பயிற்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி
ஹைலைட்ஸ்
- மத்திய அமைச்சர் ரத்தோர் தான் இந்த ஃபிட்னஸ் சேலஞ்சை ஆரம்பித்தார்
- விராட் கோலி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்
- மோடி, குமாரசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்
New Delhi: சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ராகவேந்திர ரத்தோர், பல பிரபலங்களை இணைத்து ஒரு ட்வீட் வெளியிட்டார். அதில் அவர் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, தான் இணைத்த பிரபலங்களையும் அப்படி செய்யுமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பலர் ரத்தோரைப் போலவே வீடியோ வெளியிட்டனர். இப்படி விராட் கோலியும் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார். அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'நீங்களும் ஃபிட்னஸ் வீடியோ வெளியிடுங்கள்' என்று அழைப்பு விடுத்தார். மோடியும் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்து, 'விராட், சீக்கிரமே எனது வீடியோவை பகிர்வேன்' என்றார்.
பிரதமர், தான் சொன்னதை காப்பாற்றும் வகையில் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று தனது ஃபிட்னஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுடன், 'இது தான் எனது காலை நேர உடற்பயிற்சிகளாகும். யோகாவைத் தவிர்த்து நான் ஒரு பஞ்சபூத பாதையில் நடப்பேன். இந்தப் பாதை பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை உதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இது மிகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் செறிவூட்டதாகவும் இருக்கும். இதை தவிர்த்து நான் மூச்சு பயிற்சிகளும் செய்வேன்' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவுடன் அவர், கர்நாடக முதல்வர் குமாரசாமி, காமன்வெல் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணிக் பத்ரா மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை ஃபிட்னஸ் சேலஞ்சில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமரின் அழைப்புக்கு குமாரசாமி, 'நீங்கள் என்னை ட்வீட்டில் இணைத்திருப்பது பெருமையாகவும் உள்ளது. எனது ஆரோக்கியம் குறித்து நீங்கள் அக்கறை காட்டுவதற்கு நன்றி. உடற்யபிற்சி என்பது நாம் எல்லோருக்கும் முக்கியம் என்று நம்புகிறேன். யோகா மற்றும் ட்ரெட்மில் ஓட்டம் என்பது எனது தினசரி உடற்பயிற்சியில் ஒரு அங்கம் தான். இருப்பினும், எனது மாநிலத்தின் வளர்ச்சி பற்றியும் ஃபிட்னஸ் பற்றியும் எனக்கு அதிக முன்னுரிமை உள்ளது. அதற்கு உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்' என்று அரசியல் ரீதியாக பதில் அளித்துள்ளார்.
யோகா செய்வதிலும் அதை பரப்புவதிலும் ஆர்வம் கொண்டுள்ள பிரதமர் மோடி, தொடர்ந்து பல்வேறு யோகா செய்வது குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.