நாள்தோறும் அதிகரித்து வரும் பாதிப்புகளால் இந்தியா உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
New Delhi: நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு, பொது முடக்கம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாயிருக்கம் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
இன்று மாலை நிலவரப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை தேசிய அளவில் 3 லட்சத்து 438 ஆக உயர்ந்துள்ளது.
நாளை காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிடும் அறிவிப்பின்போது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.
இன்றைய நிலவரப்டி 97,648 பேர் பாதிப்புடன் மகாராஷ்டிரா தேசிய அளவில் முதலிடத்திலும், 40,698 பேர் பாதிப்புடன் தமிழகம் 2-வது இடத்திலும், 34,687 பேருடன் டெல்லி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
நாள்தோறும் அதிகரித்து வரும் பாதிப்புகளால் இந்தியா உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இஸ்ரேல் போன்ற நாடுகள் தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக கூறி வந்தாலும், அவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டு தடுப்பு மருந்துகள் இன்னும் சந்தைக்கு வரவில்லை.
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரையில் 8,498 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காத நிலையில் மத்திய அரசு பொருளாதார பிரச்னைகளை சரி செய்யும் விதமாக அன்லாக் 1 என்ற பெயரில் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. சில இடங்களில் உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவை தொடக்கம், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி போன்ற தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோர் சதவீதம் 49.47 ஆக அதிகரித்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 195 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.