This Article is From Aug 08, 2018

கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி!

திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் தற்போது ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது

கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி!

திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் தற்போது ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தொடர்ச்சியாக வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து, அவர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மோடியுடன், அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலம் தொடர்ச்சியாக ட்வீட்டுகள் பதிவிட்டு வந்தார் மோடி. அவர், ‘கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகுந்த துயரை அளிக்கிறது. பாரதத்தின் மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் கலைஞர். ஏழை எளியோரின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட அவர் மக்கள் செல்வாக்கு  மிக்கவர். ஒப்புயர்வற்ற  சிந்தனையாளர். சிறந்த எழுத்தாளர். தேச முன்னேற்றத்தோடு பிராந்திய பிரச்சனைகளை தீர்க்கவும் அரும்பாடுபட்ட தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழர்கள் வாழ்வு  மேம்படுவதையே இலக்காக கொண்டவர். எதிலும் தமிழகம் முதன்மை பெறுவதை உறுதிசெய்தவர். கலைஞர் கருணாநிதியோடு பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தன. சமூக நீதி நிலைபெறும்  வகையில் மிகச்சிறந்த கொள்கைகளை வகுத்த மேதைமை கொண்டவர் அவர். சனநாயக மாண்புகள் நிலைக்கும் வகையில் நெருக்கடி நிலையை துணிவோடு எதிர்த்து போர்க்குரல் எழுப்பியதற்காக அவர் என்றும் சரித்திரத்தில் உயிர்த்திருப்பார். இந்த துயர்மிகுந்த வேளையில் அந்த உயர்ந்த தலைவரின் குடும்பத்தாருக்கும் எண்ணிலடங்கா தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதத்திற்கும் தமிழகத்திற்கும் கலைஞரின் மறைவு பேரிழப்பு. அவரது  ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்’ என்று ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார்.

மோடியை அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் கருணாநிதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.