பங்கேற்க முடியாது என்ற தகவல் அசாம் அரசுக்கும், விளையாட்டு அமைச்சகத்திற்கும் பிரதமர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
New Delhi: வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டு திருவிழா நடைபெறவுள்ளது. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விழாவில் பங்கேற்பதை மோடி தவிர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்' அசாமின் கவுகாத்தி நகரில் 10-ம்தேதி தொடங்கவுள்ளன. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் எதிரொலியாக மோடி தனது அசாம் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் அசாம் அரசுக்கு பிரதமர் மோடி தரப்பிலிருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரும் அசாம் பயணத்தை தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசாம் மாநிலத்தில் அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம், வடகிக்கு மாணவர்கள் சங்கம் ஆகியவை, பிரதமர் மோடியும், அமித் ஷாவுக்கு வடகிழக்கு மாநிலங்களின் எந்தப் பகுதிக்கு வந்தாலும் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்திருந்தன.
கவுகாத்தியில் ஜப்பான் மற்றும் இந்தியாவின் பிரதமர்கள் சந்திப்பு கவுகாத்தியில் கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் , இந்த சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பயணத்தை ரத்து செய்தார்.
இரு தரப்புக்கும் ஏற்ற தேதி முடிவு செய்யப்பட்ட பின்னர், ஜப்பான் - இந்திய பிரதமர்கள் சந்திப்பு நடைபெறும் என்று வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.