Modi Xi Summit - "சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது"
சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping), மற்றும் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) மாமல்லபுரத்தில் (Mahabalipuram) இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதிபர் ஜின்பிங் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் சென்னை வரவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநில அமைச்சர்கள், பாஜக-வின் முக்கிய நிர்வாகிகள் மலர் கொத்து கொடுத்தும் சால்வைப் போர்த்தியும் வரவேற்றனர்.
இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, “சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்.” என்று தமிழுக்கும் தமிழகத்துக்கும் தமிழிலேயே ட்வீட் செய்து புகழாரம் சூட்டினார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீன இடையே கடும் வார்த்தை போர் நடுந்து வரும் நிலையில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர்.
பிரதமர் மோடிக்கும் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு கடந்த ஏப்ரல் 2018ல் சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த இரண்டாவது உச்சிமாநாடு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இரண்டு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழிநெடுக பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜி ஜின்பிங் இடையிலான முக்கிய ஆலோசனை சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது, எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படாது என்றும், சந்திப்பு குறித்த எந்த கூட்டு அறிக்கைகளும் வெளியிடப்படாது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிக உயர்ந்த மட்டத்தில் தொடர்புகளை உருவாக்குவதும், முக்கிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்வதும் இதன் நோக்கம் என்று அவர்கள் கூறினர்.