உள்நாட்டு படகு போக்குவரத்து துறைமுகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கும் காட்சி
Varanasi: இந்தியாவில் உள்நாட்டு படகு போக்குவரத்துக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவத்தை தற்போது அளித்து வருகிறது. இதன்மூலம் எரிபொருள் உள்ளிட்டவை மிச்சப்படுத்தலாம் என மத்திய அரசு எண்ணுகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம் கங்கா நதியில் வாரணாசியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
இந்த துறைமுகத்தின் மூலம் உத்தர பிரதேசத்தின் வாரணாசி மற்றும் மேற்கு வங்காளத்தின் ஹால்டியா ஆகிய நகரங்களுக்கு இடையே கங்கை நதியின் வழியே படகுப் போக்குவரத்து நடைபெறும்.
இன்றைய தினம், சரக்குகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று வாரணாசி துறைமுகத்தை வந்தடைந்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். கடந்த 30-ம்தேதி கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட இந்த படகு உணவு, பெப்சி நிறுவனத்தின் குளிர்பானங்களை சுமந்தபடி, வாரணாசியை இன்று வந்தடைந்தது.
படகில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெட்டிகள்
ஜல் மார்க் விகாஸ் என்ற பெயரில் உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் மூலம் போக்குவரத்தை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் அதிக செலவு இல்லாத, சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத போக்குவரத்தை மேற்கொள்ள முடியும். உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையம், இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்திற்கு உலக வங்கி தொழில் நுட்ப மற்றும் நிதியுதவியை செய்துள்ளது. திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 5,369 கோடி. இதில் பாதியை மத்திய அரசும், மீதியை உலக வங்கியும் வழங்குகிறது.