விவசாயிகள், பெண்கள் மற்றும் பழங்குடியினர் மீது காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும் என ராகுல் கூறினார்.
ஹைலைட்ஸ்
- பிரதமர் மோடி பணக்காரர்களுக்கு ரூ.3.5 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளார்
- விவசாயிகள், பெண்கள், பழங்குடியினர் மீது காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும்
- சத்தீஸ்கரில் அடுத்த வாரம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
Charama, Chhattisgarh: 15 தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடன்களை பிரதமர் நரேந்திர மோடி, தனது பதவிக்காலத்தில் தள்ளுபடி செய்துள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் சாரம்மா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் வேளாண் மையங்கள் ஆக மாற்ற வேண்டும். இதன் மூலம் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு உணவு, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
கடந்த 4ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி 15 பணக்காரர்களுக்கு ரூ.3.5 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம் சட்ட திட்டத்தை இயக்க ரூ.35,000 கோடி தேவைப்படும் நிலையில் அதை விட 10 மடங்கு அதிகமான நிதியை, 15 தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு கடனாக வழங்கி அதனை தள்ளுபடி செய்துள்ளார்.
அரசு கருவூலத்திற்கான சாவியை 15 தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு மோடிஜி வழங்கியுள்ளார். ஆனால், காங்கிரஸ் அந்த சாவிகளை விவசாயிகள், இளைஞர்கள், ஏழை, பெண்கள் மற்றும் பழங்குடிகளுக்கு வழங்க நினைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, நவம்பர் 12-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக நவ.20ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் நவம்பர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.