நேபாள பிரதமர் கே.பி. ஒளி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி
New Delhi: டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறும் பண்டிகைகளில் விருந்தினராக கலந்து கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க நேபாள பிரதமர் கே.பி. ஒளி முடிவு செய்துள்ளார். இதனால் மோடி நேபாளம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாளத்தின் ஜானக்பூரில் விவாக பஞ்சமி விழா டிசம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதேபோன்று சீனாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கும் கே.பி. ஒளி நடவடிக்கை எடுத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் சீனா மற்றும் இந்தியா உடனான உறவை பேணுவதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறியிருந்தார்.
பாகிஸ்தானுடன் சேர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அந்நாட்டிற்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது. இதேபோன்று நேபாளத்திலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக பெய்ஜிங்கில் இருந்து காத்மாண்டு வரைக்கும் ரயில் பாதையை நீட்டிப்பு செய்வதற்கு சீனா நேபாளத்திற்கு உறுதி அளித்துள்ளது. இதையடுத்து, நேபாளத்திற்கு ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த திட்டம் தொடர்பான ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் செல்லும் போது ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது, நேபாளத்தின் ஜானக்பூர் பகுதியில் உள்ள கஜூரி ரயில் நிலையத்திற்கு பீகாரின் ஜெய் நகரில் இருந்து சோதனை ஓட்டமாக ரயில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.