This Article is From Jul 27, 2018

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவு காரணமாக பொது வாழ்விலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!
New Delhi:

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவு காரணமாக பொது வாழ்விலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை நலிவுற்றதால், பல அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நேரில் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். 

இது குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோடி, ‘ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் பேசினேன். கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். எதாவது உதவி தேவையென்றால் கேட்குமாறும் தெரிவித்துள்ளேன். கருணாநிதி சீக்கிரமே பூரண குணமடைய வேண்டிக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

கருணாநிதி இம்மாதம் 18-ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியஸ்டமி கருவி நீக்கப்பட்டு பதிய கருவி பொருத்தப்பட்டது. அதையடுத்து, அவர் அன்று இரவே வீடு திரும்பினார்.

மீண்டும், சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதியின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், ‘சிகிச்சைக்குப் பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என திமுக-வின் செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.


கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கருணாநிதியின் உடல்நிலையில் வயது மூப்பின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாகக் காய்ச்சல் வந்துள்ளது. அவரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, அவரை யாரும் நேரில் சென்று பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டது.

இந்நிலையில், திமுக-வின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று இன்று 50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். திமுகவை தலைமையேற்றும், தமிழகத்தின் முதல்வராக ஆட்சியும் நடத்தி வந்த அண்ணா, 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இதையடுத்து, கட்சிக்குள் நிலவி வந்த சில குழப்பங்கள் சரி செய்யப்பட்டு, 1969 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கருணாநிதி, திமுக-வின் தலைவராக பதவியேற்றார். 

80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை, தொடர்ச்சியாக 13 முறை எம்.எல்.ஏ, 5 முறை தமிழ்நாட்டின் முதல்வர் என பல சாதனைகளை நிகழ்த்திய கருணாநிதி, தற்போது ஒரு இயக்கத்தின் தலைவராக 50 வது ஆண்டை துவக்கியதன் மூலம் இன்னொரு சாதனையைப் படைத்திருக்கிறார். அவர் உடல்நலம் பெற்று முழுமையாக குணமடைய தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி இந்திய அளவில் பல அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

.