This Article is From Sep 15, 2018

பொறியாளர் தினம் இன்று: லட்சக்கணக்கானோர் பயன்பெறும் கே.ஆர்.எஸ். அணையை கட்டிய விஸ்வேஸ்ரய்யா

ஆசியாவிலேயே மிகப்பெரும் அணையாக இருந்த மைசூரின் கிருஷ்ண ராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையை கட்டுவதற்கு தலைமை பொறியாளராக இருந்தவர் விஸ்வேஸ்வரய்யா

பொறியாளர் தினம் இன்று: லட்சக்கணக்கானோர் பயன்பெறும் கே.ஆர்.எஸ். அணையை கட்டிய விஸ்வேஸ்ரய்யா

டூடுல் மூலமாக விஸ்வேஸ்ரய்யாவுக்கு கூகுள் நிறுவனம் மரியாதை செலுத்தியுள்ளது.

New Delhi:

மிகச்சிறந்த பொறியியல் வல்லுநரும், பாரத ரத்னா விருதைப் பெற்றவருமான விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள் (செப்டம்பர் 15) தேசிய பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை கவுரவப் படுத்தும் வகையில் ‘மைசூர் திவான்’ என்ற பெயரை சூட்டி கூகுள் நிறுவனம் தனது கூகுள் டூடுலில் விஸ்வேஸ்வரய்யாவின் புகைப்படத்தை வைத்துள்ளது.

மைசூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ண ராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை கட்டப்பட்டபோது அந்த அணைதான் ஆசியாவிலேயே மிகப்பெரும் அணையாக இருந்தது. இந்த அணை கட்டுமான திட்டத்தின் தலைவராக விஸ்வேஸ்வரய்யா செயல்பட்டார். ஐதராபாத்தின் வெள்ள பாதுகாப்பு அமைப்பு, கடல் அரிப்பில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகத்தை பாதுகாக்கும் திட்டம் ஆகியவற்றின் தலைவராகவும் விஸ்வேஸ்வரய்யா இருந்தார்.

சமீபத்தில் வெளியான பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையில் விஸ்வேஸ்வரய்யாவை போற்றும் விதமாக பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளும், தேசிய பொறியாளர் தினமான இன்று மோடி ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அவர் தனது பதிவில், பொறியாளர் தினமான இன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் கடினமாக உழைத்துவரும் பொறியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை கட்டமைப்பதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தலைசிறந்த பொறியாளர் விஸ்வேஸ்ரய்யாவுக்கு மரியாதை செலுத்திக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கடந்த மாதம் 26-ந்தேதி பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாதவற்றை இந்த நாட்டுக்காக பொறியாளர்கள் செய்து முடித்துள்ளனர். அவர்களது உருவாக்கம் ஓர் அற்புதமாகத்தான் கருதப்படுகிறது. அந்த வகையில் தலைசிறந்த பொறியாளர்களை இந்தியா வரமாக பெற்றிருக்கிறது. அவர்களில் ஒருவர் செய்துள்ள பணி அனைத்திலும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. அந்த நபர் பாரத ரத்னா விஸ்வேஸ்வரய்யா. லட்சக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் அவர் கட்டிய கிருஷ்ண ராஜ சாகர் அணையால் பலனடைந்து வருகின்றனர்.

அவரது பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தியை பொறியாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். அவர் பின்பற்றிய கொள்கைகள், அர்ப்பணிப்பு, செயல் திறன் உள்ளிட்டவற்றை பின்பற்றி பொறியாளர்கள் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்று மோடி பேசினார்.

.