20 மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியுடனான மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
- பிரதமர் உடனான ஆலோசனையில் 20 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
- நாளை தமிழக முதல்வர் உள்பட 15 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்பு
New Delhi: மத்திய அரசு அறிவித்துள்ள பொது முடக்கம் ஜூன் 30-ம்தேதி முடிவுக்கு வரவுள்ள நிலையில், அதற்கு பின்னர் என்ன செய்யலாம் என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். லடாக்கில் இந்தியா - சீனா ராணுவத்தினரிடையே மோதல் வெடித்திருக்கும் நிலையில் இந்த கூட்டம் நடந்து வருகிறது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலில் கால்வான் பள்ளத்தாக்கு இருக்கும் லடாக் பகுதியில் நேற்றிரவு, இந்தியா - சீனா ராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர்.
இதில் இந்தியா தரப்பில் ராணுவ கர்னல் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளி வந்துள்ளது.
முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 1962-ல் போர் ஏற்பட்டது. அதன்பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நடந்து உயிரிழப்பு ஏற்படுவது என்பது இதுவே முதல்முறையாகும்.
இதற்கிடையே, நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில் கொரோன பாதிப்பை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ள பஞ்சாப், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் உள்பட 20 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.
நாளை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்பட 15 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பிரதமர் உடனான மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
உலகம் முழுவதும் 4.36 லட்சம்பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 80.29 லட்சம்பேரை பாதித்துள்ளது.