This Article is From Apr 12, 2019

கோவையில் பிரதமர் மோடியின் ‘சவுகிதார்’ உறுதிமொழி பலருக்கு பாதகம்… ஏன்?

வட இந்தியாவில் இருக்கும் சூழலும் இந்தப் பகுதியில் இருக்கும் சூழலும் முற்றிலும் வேறாகத்தான் இருக்கிறது.

கோவையில் பிரதமர் மோடியின் ‘சவுகிதார்’ உறுதிமொழி பலருக்கு பாதகம்… ஏன்?

பிரதமர் மோடி, தமிழகத்துக்கு ஒவ்வொரு முறை வரும்போதும், #GoBackModi மற்றும் #WelcomeModi என்கின்ற ஹாஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின்றன.

ஹைலைட்ஸ்

  • கோவைதான் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம்
  • பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமல் கோவையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
  • இந்த முறை பாஜக - அதிமுக-வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது
Coimbatore, Tamil Nadu:

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தனது முதல் பரப்புரையை கோயம்புத்தூரிலிருந்து ஆரம்பித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒரு ‘சவுகிதாராக' கோவையின் வளர்ச்சியை முன்னிருத்திப் பேசினார். 

தமிழக உற்பத்தித் துறையில் பெரும் பங்காற்றுகிறது கோவை. அங்கு ஏராளமான சிறு மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் புழக்கத்தில் இருந்த 86 சதவிகிதப் பணத்தையும் ஜி.எஸ்.டி வரி முறையையும் அறிமுகப்படுத்திய பின்னர், கடுமையாக பாதிக்கப்பட்டன. 

கடந்த 2017 ஜூலையில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. வாகனப் பொருட்கள் உற்பத்தி, தங்க நகை தயாரிப்பு முதல் பல பொருட்களை உற்பத்தி செய்து வந்த கோவையின் 40 சதவிகித நிறுவனங்கள், ஜி.எஸ்.டி அமலுக்குப் பிறகு தொழிலை இழுத்து முடியுள்ளன. 
 

fj1o1gho

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக, பாஜக-வுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது.


41 வயதாகும் சிவக்குமார், கடந்த ஆண்டு வரை மோட்டார் பம்புகளுக்கு பாகங்கள் செய்யும் சிறிய உற்பத்தி நிறுவனத்தை வைத்திருந்தார். ஆனால், தொழில் நலிவடைந்த பின்னர் அவர், கோயம்புத்தூரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இப்போது சிவக்குமார் 8,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார். இது முன்னர் அவர் ஈட்டிய வருமானத்தின் மூன்றில் ஒரு பங்குதான். “18 சதவிகித ஜி.எஸ்.டி என்பது எனது தொழிலை முற்றிலும் அழித்துவிட்டது. பாஜக வேட்பாளர், தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரி 5 சதவிகிதத்துக்குக் குறைக்கப்படும் என்கிறார். ஆனால், எனக்கு அது எந்தப் பயனையும் தராது” என்று வருந்துகிறார் சிவக்குமார். 

அவர் தொடர்ந்து, “அம்மா (ஜெயலலிதா) இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. நான் எப்போதும் அதிமுக-வின் ஆதரவாளனாகத்தான் இருந்துள்ளேன். ஆனால், என் வாழ்க்கையை அழித்த பின்னர் எப்படி பாஜக-வுக்கு ஓட்டு போட முடியும்” என்கிறார் விரக்தியுடன்.

rh969kg

மேற்கு தமிழகத்தில் ஜெயலலிதாவுக்குப் பெரும் ஆதரவு இருக்கிறது.

18 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அதிமுக- பாஜக ஒரு புறமும், திமுக- காங்கிரஸ் மறுபுறமும் தேர்தல் களத்தில் மல்லுக்கட்டி வருகின்றன. 

கோயம்புத்தூரைப் பொறுத்தவரை, இதுவரை நடந்த தேர்தல்களில் 3 முறை மட்டும்தான் தேசியக் கட்சி வெற்றி பெற்றதில்லை. 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, வெற்றிவாகை சூடியது. அப்போது ஜெயலலிதா, ‘அந்த மோடியா… இந்த லேடியா..?' என்று கோஷத்தை முன்வைத்து மக்களிடத்தில் வாக்கு கேட்டார். 2014 தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் இருக்கும் 39 தொகுதிகளில் 37-ல் அதிமுக வெற்றி பெற்றது. அதிமுக இந்த முறை அவ்வளவு வலுவாக இல்லை. ஜெயலலிதாவின் மறைவு, அந்த கட்சியில் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. 
 

e78r551o

முன்னதாக பாஜக, 'நாட்டின் மிக ஊழல் வாய்ந்த மாநிலம் தமிழகம்' என்று கூறியிருந்தது.

கடந்த தேர்தலில் பாஜக, தமிழகத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டும்தான் வெற்றியடைந்தது. இந்த முறை கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக சார்பில் களமிறங்குகிறார். இதே தொகுதியில் அவர் முன்னரும் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார். குறிப்பாக 1990-களில் கோவையில் மதக் கலவரம் உண்டானபோது, சி.பி.ஆர் வெற்றி பெற்றார். கலவரத்தைத் தொடர்ந்து 1997-ல், காவல்துறை ரவுடி கும்பல் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சில மாதங்கள் கழித்து கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்தனர். 200 பேருக்கு மேல் காயமடைந்தனர். 

“கலவரம் என்பது உறப்த்தித் துறைக்கு நல்லதல்ல. இதனால், பல ஆண்டுகளாக கோவையில் அமைதியே நிலவி வருகிறது. அதே நேரத்தில் இரு பக்கமும் இருக்கின்ற சில மத இயக்கங்கள், கோவையில் தொடர்ந்து பலம் பெற்று வருகின்றன. அடிப்படைவாத இயக்கங்களான இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அல்-உம்மா போன்ற இயக்கங்கள் இங்கு பலம் பெற்றுள்ளன. அரசியல் கட்சிகளும் அதை பயன்படுத்திக் கொண்டன” என்று ஒரு மூத்த முதலீட்டாளர் கூறினார். 
 

hoe517a

இந்த முறை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கிவிட்டதாக ஸ்டாலின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (கோப்புப் படம்)

கோவை பாஜக வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன், ‘திமுக கூட்டணி இந்துக்களுக்கு எதிரானது. நான் ஒரு சாதிக்காகவோ ஒரு சமூகத்துக்காகவோ பிரசாரம் செய்யவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் எனது பிரசாரங்கள் இருந்து வருகின்றன' என்று NDTV-யிடம் விளக்கினார். 

சி.பி.ஆர், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். கோவையில், 40 சதவிகிதத்தினர் கவுண்டர்கள்தான். மேற்கு தமிழகத்தில் 60 சதவிகிதத்தினர் கவுண்டர்கள்தான். பிற்படுத்தப்பட்ட சமூகமான கவுண்டர்கள், கடந்த பல ஆண்டுகளில் பெரும் சொத்துகளின் அதிபதிகளாக மாறியுள்ளனர். பொதுவாக தமிழகத்தில் பெரும்பான்மை கவுண்டர்களின் ஆதரவு அதிமுக-வுக்குத்தான் இருக்கும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 8 தமிழக அமைச்சர்கள் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்குக் கோவை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நடராஜன் கோவையில் போட்டியிடுகிறார். அவர் இந்தத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. “பொதுவாக கோயம்புத்தூர் சாதி அடிப்படையிலோ மத அடிப்படையிலோ ஓட்டு போடாது. இங்கு இடதுசாரி கட்சிகள் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. இங்கு இருக்கும் மக்கள், தங்களது தொழிலுக்கு ஏற்றவாறு குரல் கொடுக்கும் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். பாஜக-வின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பல்லாயிரக்கணக்கானோர் வேலைகளை இழந்துள்ளனர்” என்று தன் தரப்பு குறித்து விளக்கினார் நடராஜன். 

t2k8hf0g

கோயம்புத்தூரிலும், தீவிரவாதத்துக்கு எதிரான தனது நடவடிக்கை குறித்தே பிரதமர் மோடி அதிகம் பேசினார். 

பிரதமர் மோடி, தமிழகத்துக்கு ஒவ்வொரு முறை வரும்போதும், #GoBackModi மற்றும் #WelcomeModi என்கின்ற ஹாஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின்றன. ஆனால், 2014 முதல் தமிழகத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று மக்கள் நினைப்பதாக கூறுகிறார் ஒரு இடதுசாரி ஆதரவாளர்.

“டெல்லியில் காவிரி டெல்டா விவசாயிகள் 150 நாட்கள் போராடியபோது, அதை பிரதமர் மோடி என்னவென்று கூட கண்டுகொள்ளவில்லை. அதேபோல நீட் தேர்வுக்கு அனுமதி கொடுத்தது தமிழக மக்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார் இடதுசாரியான ராமா. 
 

o673165g

நீட் போராட்டங்கள் போது, பாஜக-வுக்கு எதிரான மனநிலை மிக அதிகமாக இருந்தது

அதேபோல ‘பொள்ளாச்சி பாலியல் கொடூரம்' குறித்தும் திமுக கூட்டணி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது. “பொள்ளாச்சி விவகாரம் கோயம்புத்தூரில் உள்ள பெண் வாக்களர்களை தங்கள் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைக்கும்” என்று நம்புகிறார் கோயம்புத்தூர் உணவகம் ஒன்றில் பணி செய்யும் ராதிகா. 

வட இந்தியாவில் இருக்கும் சூழலும் இந்தப் பகுதியில் இருக்கும் சூழலும் முற்றிலும் வேறாகத்தான் இருக்கிறது. வரும் தேர்தலில் முதன்முறையாக ஓட்டு போடப்போகும் அருண் விஷ்வநாதன், “இந்திய அடையாளத்தால் தமிழ் அடையாளம் சிதைக்கப்படுகிறது. முதல் முறை ஓட்டு போடுபவர்களை, தேசத்தை பலப்படுத்த வாக்களிக்குமாறு மோடி கேட்கிறார். நான் முதலில் தமிழகத்தை பலப்படுத்த வாக்களிப்பேன்” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதியுள்ளார். 

.