This Article is From Feb 09, 2019

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

திருப்பூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை பிற்பகல் 2.30 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைகிறார்

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

திருப்பூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை பிற்பகல் 2.30 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெருமாநல்லூர் செல்லும் அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்காக பொதுக்கூட்ட மேடை அருகே மற்றொரு மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் அரசு திட்ட பணிகளை மோடி தொடங்கி வைக்கிறார்.

இதில், சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே புதிய மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். பாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

அரசு திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், பொள்ளாச்சி, கரூர் ஆகிய 8 தொகுதிகளை சேர்ந்த பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதற்காக திருப்பூர் பெருமாநல்லூரில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, மாலை 4.20 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அவர் 4.55 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். மாலை 5.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடகம் செல்ல உள்ளார்.

பிரதமர் வருகையை ஒட்டி 3,000-க்கும் அதிகமான போலீசார் திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

.