இந்திய உடற்தகுதி இயக்கத்தை (Fit India) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஹைலைட்ஸ்
- நமது கலாச்சாரத்தில் ஒரு அங்கமாக எப்போதுமே பிட்னஸ் உள்ளது.
- ஓடுங்கள் அல்லது சைக்கிளிங் செய்யுங்கள்.
- இப்போது உடற்பயிற்சியில் அலட்சியம் உள்ளது.
New Delhi: தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி இந்திய உடற்தகுதி இயக்கத்தை (Fit India) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
விளையாட்டு உலகில் இவரது சாதனைகளை பாராட்டியது மட்டுமில்லாமல் தயான் சந்த்-இன் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ம் தேதியை தேசிய விளையாட்டு தினமாக அனுசரித்து கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், அனைவரும் உடல் பலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காமல் மாணவ மாணவியர்கள் இளைஞர்கள் மைதானத்தில் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்பதற்காகவும் இந்திய உடற்தகுதி இயக்கம் உருவாக்கப்பட்டது.
டெல்லி இந்திரா காந்தி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, (ஃபிட் இந்தியா) இந்திய உடற்தகுதி இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியபோது, வெற்றிக்கு படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள், லிஃப்ட் வேண்டாம். உடற்தகுதி என்பது இந்தியாவில் ஒரு இயக்கம் மட்டுமல்ல, நமது கலாச்சாரத்தில் ஒரு அங்கமாக எப்போதுமே பிட்னஸ் உள்ளது.
ஆனால், இப்போது உடற்பயிற்சியில் அலட்சியம் உள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்பு, சராசரி மனிதன், ஒருநாளைக்கு 8 முதல் 10 கி.மீட்டர் வரை நடந்தான். எனவே, ஓடுங்கள் அல்லது சைக்கிளிங் செய்யுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் உடல் செயல்பாடு குறைந்துள்ளது. நாம் குறைந்த அளவே தற்போது நடக்கிறோம். அதேவேளையில், நாம் குறைவாக நடப்பதாக அதே தொழில்நுட்பம் நம்மிடம் கூறுகிறது என்றார்.
மக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது, நாட்டின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆரோக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர்கள் நமது முன்னோர்கள் என்று அவர் கூறினார்.
மேலும், விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே உடற்பயிற்சி அவசியம் என தெரிவித்த பிரதமர், தினசரி உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ முடியும் என்றார்.
முன்னதாக, ஆரோக்கியத்தை வலியுறுத்தும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் அரங்கில் நிகழ்ந்தன. வண்ண உடைகளில் மேடையில் தோன்றி குழந்தைகளும், இளைஞர்களும் விளையாட்டுக்களை விளையாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். மேலும், தற்காப்புப் போட்டிகளும், நடனப்போட்டிகளும் இந்த நிகழ்ச்சியில் நடத்திக் காட்டப்பட்டன.
இந்த நிகழ்வில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறைகள் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.