மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பேசவுள்ளனர்.
New Delhi: இந்திய மருந்து நிறுவனங்களின் மதிப்பை கொரோனா பாதிப்பு உலகம் அறியச் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா குளோபல் வீக் 2020 என்ற வீடியோ கான்பரன்சிங் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மாநாட்டில் அவர் பேசியதாவது-
உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. இதனை உலக நாடுகள் பயன்படுத்திக் கொள்ளள வேண்டும்.
முடியாததையும் முடித்துக் காட்டும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு. உலக நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு இந்தியா தயாராக இருக்கிறது. இந்தியா தன்னை சீர்திருத்திக் கொண்டு, சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டும் இருக்கிறது.
கடந்த 6 ஆண்டுகளில் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. குறிப்பாக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு மற்றும் சேவை வரியாக மாற்றியது, வர்த்தகம் தொடங்குவதற்கான வழிகளை எளிமைப்படுத்தியது, உட்கட்டமைப்பை மேம்படுத்தியது என்பவை அவற்றுள் சில.
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் உலகத்திற்கு இந்திய மருந்து நிறுவனங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்துள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
3 நாட்களுக்கு இந்த மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இதில், கொரோனா பாதிப்பால் மாதக்கணக்கில் முடங்கிக் கிடக்கும் சர்வதேச பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
முன்னதாக நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்திருந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020-ல் 1.9 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஏப்ரலில் சர்வதேச நிதியம் கூறியது குறிப்பிடத்தக்கது.
3 நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் வேளாண்மை முதல், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட முக்கிய துறைகளில் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பேசவுள்ளனர்.