தவறான தகவல்களையும், அச்சத்தையும் பரப்பி வருவதாகவும் காங்கிரசை மோடி விமர்சித்திருக்கிறார்.
ஹைலைட்ஸ்
- முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை காங்.விதைப்பதாக மோடி குற்றச்சாட்டு
- அரசியல் காரணங்களுக்காக அச்சத்தை காங்கிரஸ் பரப்புகிறது என்கிறார் மோடி
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசினார்
Berhait, Jharkhand: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், முஸ்லிம்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பெர்ஹைத் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது-
காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் ஒரு சவாலை விடுக்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவிக்கத் தயாரா? அப்படி அறிவித்தால் அதற்கான பிரதிபலனை நாட்டு மக்கள் அவர்களுக்கு அளிப்பார்கள்.
இந்தியாவில் பொய்யான தகவல்களையும், அச்சத்தையும் காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது. நாங்கள் தற்போது குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். மீண்டும் இதுதொடர்பாக பொய்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது. இந்தியாவில் உள்ள எந்த குடிமக்களையும் குடியுரிமை திருத்த சட்டம் பாதிக்காது.
அண்டை நாட்டிலில் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இந்தியா வந்துள்ள சிறுபான்மையின மக்களுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
இவ்வாறு மோடி பேசினார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகினற்ன. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இதில் ஜாமியாவில் போலீசார் புகுந்து மாணவர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதில் குண்டுக் காயம் அடைந்து 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து 2015-க்கு முன்னர் வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை சட்டம் குடியுரிமையை வழங்குகிறது.
இதனை எதிர்த்து நடைபெறும் போராட்டம் பற்றி பேசிய மோடி, 'குடியுரிமை சட்டம் எந்த இந்திய முஸ்லிம் அல்லது இந்திய குடிமகனின் உரிமையை பறிக்கிறது? எதற்காக காங்கிரஸ் பொய் சொல்கிறது. காங்கிரசும், அதன் நண்பர்களும் முஸ்லிம்களை அச்சுறுத்தப் பார்க்கின்றனர். காங்கிரசின் பிரித்தாளும் கொள்கை காரணமாக நாடு ஏற்கனவே ஒருமுறை பிரிந்து விட்டது. காங்கிரசால் நாடு பல துண்டுகளாக ஏற்கனவே பிரிந்தது. அதனால் லட்சக்கணக்கானோர் இந்தியாவுக்குள் ஊடுருவி விட்டனர். அவர்களை காங்கிரஸ் வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது' என்று பேசினார்.