கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். “கலைஞர் கருணாநிதியின் மறைவை அறிந்து வருத்தம் அடைந்தேன். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் அவர். மிக ஆழ்ந்த அனுபவம் கொண்ட தலைவர், சிந்தனையாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், ஏழைகளுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர் அவர். மாநில நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் முன் நின்றவர். அவர் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்.” என்று கூறியிருந்தார்.
மேலும், “ கருணாநிதி அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கொள்கை மற்றும் சமூக நலனில் உறுதி மிக்கவர். ஜனநாயகத்தில் மிகுந்த உறுதி கொண்டவர். அவசர காலம் பிரகடனம் செய்யப்பட்ட போது அவர் காட்டிய எதிர்ப்பு என்றென்றும் நினைவில் கொள்ளப்படும்.” என்றார்.
"இந்நேரத்தில், என்னுடையை எண்ணமெல்லாம் அவரது குடும்பத்தினர் மீதும், அவரது எண்ணற்ற தொண்டர்கள் மீதும் தான் இருக்கிறது. இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு ஒரு பெருந்தலைவரை இழந்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்றும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.