This Article is From Oct 30, 2019

ரயில்வே பிளாட்ஃபார்மில் டீ விற்றுள்ளேன்: பிரதமர் மோடி சவுதியில் பேச்சு!!

கழிவறை கட்டிக்கொடுத்தல், வங்கி கணக்கு திறந்து கொடுத்தல் உள்ளிட்ட செயல்களால் இந்தியாவில் ஏழைகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்களின் தகுதியும் உயர்த்தப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரயில்வே பிளாட்ஃபார்மில் டீ விற்றுள்ளேன்: பிரதமர் மோடி சவுதியில் பேச்சு!!

இந்தியாவில் ஒரு மாற்றம் ஏற்பட்டால், இது உலகம் முழுவதும் பிரதிபலிக்கும் - பிரதமர் மோடி

Riyadh:

நான் அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தை சார்ந்தவன் அல்ல, மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்டவன், ரயில்வே பிளாட்ஃபார்மில் டீ விற்பது எனது வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதியாகும் என பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் கூறியுள்ளார். 

சவுதி அரேபியாவில் நடக்கும் ‘எதிர்கால முதலீடுக்கான முயற்சி' என்ற உயர்மட்ட பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் ரியாத் சென்றடைந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, அங்கு நடந்த கேள்வி பதில் அமர்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, நான் எந்த பெரிய அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தையும்  சார்ந்தவன் அல்ல. நான் வறுமை குறித்து புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ளவில்லை. ஆனால், நான் வறுமையில் தான் வாழ்ந்தேன். ரயில்வே பிளாட்ஃபாரத்தில் டீ விற்ற நான் தற்போது இந்த இடத்தை அடைந்துள்ளேன். 

இன்னும் சில ஆண்டுகளில், வறுமையை ஒழிப்பதில் இந்தியா வெற்றி பெறும். வறுமைக்கு எதிரான எனது போராட்டம் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதாகும். ஒரு ஏழை நபர் தனது வறுமையை தானே துடைத்தெரிவதாக கூறுவதை விட பெரிய திருப்தி எதுவும் இல்லை. ஏழைகளுக்கு தகுதியையும், அதிகாரத்தையும் அளிப்பதும் மட்டுமே எங்களின் தேவையாக உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, கழிவறை கட்டிக்கொடுத்தல், வங்கி கணக்கு திறந்து கொடுத்தல் உள்ளிட்ட செயல்களால் இந்தியாவில் ஏழைகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்களின் தகுதியும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு மாற்றம் ஏற்பட்டால், இது உலகம் முழுவதும் பிரதிபலிக்கும்.

இந்தியாவை நாங்கள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடாகவோ, அல்லது வறுமை ஒழிந்த நாடாகவோ மாற்றும் போது, உலகத்தின் பார்வையும் மாறும். அது எங்களுக்கு திருப்தியை அளிக்கும். உலகத்தை மேம்படுத்துவதற்கு நாங்களும் பங்களிப்பு செய்கிறோம் என்ற உணர்வை தரும் என்று அவர் கூறியுள்ளார்.
 

.