Kampala: உகாண்டாவுக்கு இரண்டு நாள் பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் யோவேரி முசிவெனியுடன் இணைந்து, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்தார்.
1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் உகாண்டாவுக்கு அரசு முறை பயணம் செல்வது இதுவே முதல் முறையாகும். நேற்று மாலை அவர் உகாண்டாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் முசிவெனியுடன் கலந்துரையாடினார். பின்னர் அந்நாட்டு தலைநகர் கம்பாலாவில், உகாண்டா வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த உரையாடல் நடந்தது. பெரும் அளவிலான இந்தியர்கள் பிரதமர் மோடியின் பேச்சைக் காண வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், ‘உகாண்டா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடியும் அதிபர் முஸ்வெனியும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் அளவிலான இந்தியர்கள் திரண்டிருந்தனர். இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையில் கலாச்சார மற்றும் பொருளாதார பிணைப்பை இங்கு வாழும் இந்தியர்கள்தான் ஏற்படுத்துகின்றனர். உகாண்டா அதிபரும், நாட்டில் வாழும் இந்தியர்கள் குறித்து புகழ்ந்து பேசினார். அவர்களின் கடுமையான உழைப்புக்காகவும் உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் வித்திடும் இந்தியர்களை அவர் வெகுவாக பாராட்டினார். பிரதமர் பேசும்போது, உகாண்டா வாழ் இந்தியர்களை அரவணைத்துக் கொண்டதற்கு அதிபர் முஸ்வெனிக்கு நன்றி தெரிவித்தார்’ என்று அவரது அதிகாரபூர்வ ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.