This Article is From Apr 12, 2019

பிரதமர் மோடி ’காவலாளி அல்ல களவாணி’: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி காவலாளி அல்ல களவாணி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி ’காவலாளி அல்ல களவாணி’: மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், சேலத்தில் இன்று ஒரே மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஸ்டாலின், அடுத்த பிரதமர் ராகுல் என்று நான் அறிவித்த அறிவிப்புக்கு தற்போது ஆதரவு பெருகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ, பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ. திராவிட இயக்கத்தின் எண்ணங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொடுமையான ஆட்சி, மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. ஏழைத் தாயின் மகனின் ஆட்சியில், விஜய் மல்லையா, நிரவ் மோடி கோடி கோடியாக கொள்ளையடித்து செல்கின்றனர்.

பிரதமராக இருக்க கூடிய மோடி காவலாளி அல்ல களவாணி. மோடி பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பம், அவரது ஆட்சியில் ஏழைகள் பரம ஏழைகளாக மாறி கொண்டிருக்கிறார்கள். மாநில உரிமையை பெற்றுத்தருவது என்ற கொள்கையை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அண்ணாவும், கலைஞரும் இருந்திருந்தால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து மகிழ்ந்திருப்பார்கள். வேலை வாய்ப்பை பற்றி பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்க்க அண்ணா இல்லை, கலைஞரும் இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் மராட்டியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்க திமுக முடிவெடுத்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

.