முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ஆனந்த் மகேந்திரா, சுனில் பாரதி மிட்டல், கவுதம் அதானி உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி.
New Delhi: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாட்டின் மிக முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பின்னர் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, ஏடெல்லின் சுனில் பாரதி மிட்டல், கவுதம் அம்பானி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பல்வேறு தொழில் துறையை சேர்ந்தவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள சூழலில் நாட்டின் முக்கிய தொழில் அதிபர்கள் உடனான சந்திப்பு இன்று நடந்துள்ளத.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. 4.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. உற்பத்தி மற்றும் நுகர்வு தேவை ஆகியவைகள் பொருளாதார மந்த நிலைக்கு முக்கிய காரணங்களாகும்.
மந்த நிலையை சீரமைப்பதற்காக கார்ப்பரேட் வரியை கடந்த செப்டம்பர் மாதம் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைந்தது. இதேபோன்று வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த வரி விதிப்பு முறை உள்ளது.
வங்கிகளை மறு மூலதனமயமாக்கல், பொதுத்துறை வங்கிகள் 10-யை 4 ஆக இணைப்பது, ஆட்டோ மொபைல் துறைக்கு சலுகைகள், உட்கட்டமைப்பு திட்டங்கள், தொடக்க நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் போன்ற பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
கடந்த 2019 பிப்ரவரி மாதம் முதற்கொண்டு நாட்டின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கி வரிக்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.