This Article is From Nov 09, 2019

''அயோத்தி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை'' - பிரதமர் மோடி!!

நாடே எதிர்பார்த்த அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில் நாட்டின் அமைதியை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

''அயோத்தி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை'' - பிரதமர் மோடி!!

சுமார் 30 ஆண்டு கால வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

New Delhi:

அயோத்தி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ தோல்வியோ அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக ட்வீட் செய்திருக்கும் பிரதமர், நாட்டின் அமைதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். 

சுமார் 30 ஆண்டுகளாக நீடித்து வரும் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதற்றம் நிறைந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. 

இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது

விசாரணை நடந்து கொண்டு இருந்த போதே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் யோசனையை முன்வைத்த அரசியல் சாசன அமர்வு, ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது. . 

அந்த குழு சம்பந்தபட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமுகமாக தீர்க்க முயற்சி எடுத்தனர். எனினும், முடிவு எட்டப்பவில்லை. இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் அயோத்தியில் கோயிலை கட்டலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பு குறித்து முன்னதாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, அயோத்தி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ கிடையாது. நாட்டின் அமைதியை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

.