21 நாட்களும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதி மக்களிடம் உரையாடினார்
- 21 நாட்களில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற வேண்டும் : மோடி
- மருத்துவர்களை துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : மோடி
New Delhi: மகாபாரதப்போர் 18 நாட்களில் வெல்லப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான இந்தப்போரை நாம் 21 நாட்களில் வெல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதற்கொண்டு இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளில் முடங்கியுள்ளனர். உலகின் மிகப்பெரும் ஊரடங்காக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசி மக்களிடத்தில் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது-
மகாபாரதப்போர் 18 நாட்களில் வெல்லப்பட்டது. கொரோனாவுக்கு எதிரான இந்தப்போரை நாம் 21 நாட்களில் வெல்ல வேண்டும்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் குறிவைக்கப்படுவது எனக்கு வேதனையை அளிக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில் அவர்கள் ரூபத்தில் நமக்கு கடவுள் வந்துள்ளார். இன்றைக்கு அவர்கள்தான் ஏராளமானோர்ஆபத்திலிருந்து பாதுகாக்கின்றனர்.
வைரஸ் முதலில் தோன்றிய வுஹானுக்கு சென்று அங்கு மருத்துவர்கள் மீட்பு நடவடிக்கை செய்தனர். அவர்களுடன் ஏர் இந்தியா பணியாளர்கள் பல்வேறு நாடுகளில் இருந்த இந்தியர்களை மீட்டு இங்கு கொண்டு வந்தனர். அவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதனை நான் மிக முக்கிய பிரச்னையாக எடுத்துக்கொள்கிறேன். மருத்துவர்களுக்கு தொல்லை கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கு (டிஜிபி) உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு மோடி பேசினார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 560-யை தாண்டியுள்ளது. மத்திய அரசு விதித்திருக்கும் 21 நாட்கள் கட்டுப்பாட்டால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 23-ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில், 'புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள். மற்றும் அவர்களது சென்னையை சேர்ந்த பயண வழிகாட்டியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அனைவரும் சேலம் மருத்துவமனையில் 22-ம்தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.