மோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
New Delhi: பதவியேற்று 24 மணி நேரம் ஆகியுள்ள நிலையில் மோடி அரசின் புதிய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் குறிப்பாக விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் கிசான் யோஜனா திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் பலன்கள் வழங்கப்படுகின்றன.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் மோடியுடன் 57 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்கள் ஆவர். 9 பேருக்கு தனித்துறை இணை அமைச்சர் பொறுப்பும், 24 பேருக்கு இணை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அமித்ஷா உள்துறை, ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை, நிர்மலா சீதாராமன் நிதித்துறை, ஜெய் சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
முந்தைய மோடி அரசில் அமைச்சர்களாக இருந்த சுஷ்மா சுவராஜ், உமாபாரதி, ஜெயந்த் சின்ஹா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்பட 37 பேருக்கு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அருண் ஜெட்லிக்கு அமைச்சர் பதவியை தர முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் பொறுப்பு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்.