Ram Mandir: சிறிய கூடாரத்தில் இருந்த ராமருக்கு பிரம்மாண்ட கோவில் அமைய உள்ளது: பிரதமர் மோடி
Ayodhya: சிறிய கூடாரத்தில் இருந்த ராமருக்கு பிரம்மாண்ட கோவில் அமைய உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
அயோத்தியின் ராம்ஜென்ம பூமியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என பல தசாப்தங்களாக பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதற்கான பிரம்மாண்ட பூமி பூஜை விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய விஐபிக்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, விழாவின் மையமாக ராம்ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கால் நாட்டினார். அதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, ஸ்ரீ ராமர், சீதா தேவியை நினைவு கூறுவோம் என்று ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டார். பின்னர் தனது உரையை தொடங்கினார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவுக்கு என்னை அழைத்ததற்கு மனமார்ந்த நன்றி.
உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. பலவருட காத்திருப்பு இன்றைய தினம் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்த தருணம் நடந்து முடிந்ததை கோடிக்கணக்கான இந்தியர்கள் யாராலும் இன்னமும் நம்ப முடியவில்லை.
ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது. கன்னியாகுமரி முதல் நாடு முழுவதும் ராமர் பெயர் ஒலிக்கிறது. ராமர் கோவில் அமைவதற்காக பல தலைமுறைகள் தியாகங்களை செய்துள்ளன.
ராமர் கோவில் கட்டுவதற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்கு 120 கோடி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. சிறிய கூடாரத்தில் இருந்த பகவான் ராமருக்கு பெரிய கோவில் அமைய உள்ளது. ராமர் கோவில் கட்டுவது என்பது நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் செயல்.
ஒற்றுமைக்கு பாலமாக ராமர் கோயில் இருக்கும். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அனைத்து தரப்பு மக்களும் அமைதி காத்தது பெருமைக்குரிய விஷயம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடந்த இந்த விழா மற்ற விழாக்களுக்கு முன்னுதாரனம்.
வெறுப்புணர்வை மறந்து கோடிக்கணக்கான ஒன்றிணைக்கும் சக்தி ராமருக்கு உள்ளது. ராமர் கோயிலால் அயோத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பொருளாதாரமும் மேம்படும். அயோத்திக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளனர்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ராமர் கோவிலும் உதாரணமாக திகழும். எல்லா இடத்திலும் ராமர் இருக்கிறார். அவர் எல்லோருக்கும் சொந்தமானவர். ராமரின் கொள்கையே நமது நாட்டை வழிநடத்தி வருகிறது. ராமரின் போதனைகள் உலகளவில் செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இந்தோனேசியாவில் கூட ராமாயணம் சிறப்பான இடம் வகிக்கிறது. ராம ராஜ்ஜியமே மகாத்மா காந்தியின் கனவாக இருந்தது.
ராமர் பாலத்திற்கு கற்கள் வந்தது போல், கோவில் கட்டுவதற்கும் செங்கல், மணல், புனித நீர் வந்துள்ளது. சத்தியத்தின் வழியில் நாம் அனைவரும் நடக்க வேண்டும். தமிழில் கம்பராமாயணம் போன்று பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் உள்ளது.
சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்திக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தது போல், தற்போது ராமர் கோவிலுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர் என்று அவர் கூறினார்.