This Article is From Mar 29, 2019

ஆதாரம் கேட்கிறார்கள்..! பாக். இன்னும் உடல்களை எண்ணிக்கொண்டிருக்கிறது: மோடி

மக்களவை தேர்தல் 2019: ஓடிசாவின் கோராபுத் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாலகோட் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பி வருவது குறித்து எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

ஓடிசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி.

Koraput, Odisha:

இந்திய விமானப்படை பாலக்கோட்டில் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் இன்னும் உடல்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, எதிர்கட்சிகள் இன்னும் ஆதாரம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி ஓடிசாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானைப்படை வீரர்கள் கடந்த பிப்.26ம் தேதி குண்டுகள் வீசி பயங்கரவாத பயிற்சி முகாமை தரைமட்டமாக்கியது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி ஒரு மாதத்தை கடந்து விட்டது. எனினும் பாகிஸ்தானில் இன்னும் உயிரிழந்தவர்களின் உடல்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். எதிர்கட்சிகள் இன்னும் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் கேட்டுக்கொண்டிருகின்றனர். தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா செயல்படும் போது, எதிரியின் வீட்டிற்கே புகுந்து அவர்களை அழித்து வந்தவர்களை பார்த்து எதிர்கட்சிகள் ஆதாரம் கேட்பதா? என கடுமையாக சாடினார்.

இதேபோல், 'மிஷன் சக்தி' சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தியது குறித்து நாட்டு மக்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, விண்ணில் செயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தும் இந்த சோதனை மூலம் அமெரிக்க, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்று கூறினார். அதனையும் எதிர்கட்சிகள் இது மோடியின் சிறந்த நாடகம் என கடுமையாக விமர்சித்தன.

இதனை குறிப்பிட்ட மோடி, விண்ணிற்கே இந்தியா பாதுகாவலனாக இருக்கும் போது, உலகமே நம்மை திரும்பி பார்க்கும் போது, நாம் அனைவரும் நமது விஞ்ஞானிகள் குறித்து பெருமை கொள்ளும் போது, ஒரு சிலர் எப்போதும், எதையும் கேள்வி எழுப்பி, இது போன்ற சாதனைகளையும் அவமானப்படுத்தி வருகின்றனர் என்றார்.

மேலும், இது போன்று அவர்கள் கேள்வி எழுப்புவதன் மூலம் நமது விஞ்ஞானிகளையும், ராணுவ வீரர்களையும் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு வேண்டுமா? அவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? உங்களுக்கு பலமான அரசு வேண்டுமா? அல்லது பலவீனமான அரசு வேண்டுமா என கூட்டத்தினரை பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் பலமான அரசு என ஒரு சேர பதில் குரல் அளித்தனர்

முன்னதாக, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தொடர்ச்சியாக ராகுல்காந்தி கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'நானும் காவலாளி' என்று தனது டிவிட்டர் கணக்கில் பெயருக்கு முன்னாள் சேர்த்து கொண்ட பிரதமர் மோடி, நாடு முழுவதும் பிரசாரத்தையும் தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து பாஜகவினரும் பலரும் சமூகவலைதளங்களில் தங்களது பெயருக்கு முன்னாள் சவுக்கிதார் என்று சேர்த்துக்கொண்டனர்.


 

.