மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
New Delhi: குடிமக்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான பட்ஜெட் என்று மத்திய பட்ஜெட்டை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். மத்தியில் மோடி அரசு 2-வது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளதை தொடர்ந்து முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார்.
பட்ஜெட் குறித்து பிரதமர் நநேந்திர மோடி, 'எனது நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக நிர்மலா சீதாராமன் இருக்கிறார். இந்த பட்ஜெட் இந்தியாவின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நாட்டிற்கு வளமும், மக்களை வலிமையும் இந்த பட்ஜெட் சேர்க்கும். ஏழை மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நல்ல எதிர்காலத்தை இந்த பட்ஜெட் ஏற்படுத்திக் கொடுக்கும்' என்றார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்த சில நிமிடங்களில் பிரதமர் மோடி இவ்வாறான பாராட்டுக்களை மக்களவையில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ' குடிமக்கள் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த இந்தியாவின் முதல் நிதியமைச்சர் நிர்மல சீதாராமனுக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். இந்த பட்ஜெட் குடிமக்களுக்கும், நாட்டுக்கும் வளம் சேர்க்கும்' என்றார்.
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், 'ஐந்தாண்டுகளுக்கு முன்னர் உலக பொருளாதார வளர்ச்சி நாடுகளின் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் இருந்தது. தற்போது 6வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய 55 ஆண்டுகளுக்கு மேலாகியது. ஆனால் இதயங்களின் நம்பிக்கையால், வெறும் 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர்களைச் அடைந்துள்ளோம்.
இந்தியாவை 2.7 டிரில்லியன் டாலரிலிருந்து, 2024/2025க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்க்கும் இலக்கை பிரதமர் மோடி நிர்ணயித்துள்ளார்.' என்று குறிப்பிட்டிருந்தார்.