This Article is From Jan 03, 2020

'பாகிஸ்தானுக்கு எதிராக குரலை உயர்த்துங்கள்' - CAA எதிர்ப்பாளர்களுக்கு மோடி பதிலடி!!

குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினர், மத அச்சுறுத்தலால் இந்தியாவுக்கு வருவார்கள் என்றால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது இந்தியாவின் கலாசாரம் மற்றும் தேசத்தின் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

'பாகிஸ்தானுக்கு எதிராக குரலை உயர்த்துங்கள்' - CAA எதிர்ப்பாளர்களுக்கு மோடி பதிலடி!!

காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார் மோடி.

New Delhi:

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறவர்கள் மத்திய அரசுக்கும், நாடாளுமன்றத்திற்கும் எதிராக போராடாமல் பாகிஸ்தானுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினர், மத அச்சுறுத்தலால் இந்தியாவுக்கு வருவார்கள் என்றால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது இந்தியாவின் கலாசாரம் மற்றும் தேசத்தின் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று மோடி பேசுகையில், 'மதத்தின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. மதத்தின் பெயரால்தான் இந்தியா பிரிக்கப்பட்டது. இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், ஜெய்ன் என யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிரான வன்முறை பாகிஸ்தானில் அதிகரித்திருக்கிறது. அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். 

இன்றைக்கு பாகிஸ்தானை சர்வதேச சமூகத்தில் குற்றவாளியாக நிறுத்துவது என்பது அவசியம். நீங்கள் போராட்டம் நடத்துவதாக இருந்தால் கடந்த 70 ஆண்டுகளாக அராஜகத்தில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தானை எதிர்த்து போராட்டம் நடத்துங்கள். சிறுபான்மையினருக்கு எதிராக அராஜகம் நடக்கும் பாகிஸ்தானை எதிர்த்து முழக்கமிடுங்கள். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் அடித்தட்டு, தலித் மக்களுக்காக பேரணி செல்லுங்கள். 

இந்தியாவுக்கு புகலிடம் தேடி வந்திருக்கும் பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் பேரணி நடத்தி வருகின்றன. 

இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. நாடாளுமன்றத்திற்கு எதிரான அமைப்புகளை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் தலித்துகள், அச்சுறுத்தலால் இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

சர்வதேச அளவில் இந்தியாவை அவமானப்படுத்தும் காரியத்தை எதற்காக அவர்கள் செய்கின்றனர்? நான் அவர்களுக்கு ஒன்றை சொல்கிறேன். இந்த சட்டத்தை அவர்கள் விரும்பாவிட்டால், அவர்கள் என்னை திட்டட்டும்' என்று மோடி பேசினார். 

குடியுரிமை சட்ட திருத்தம் என்பது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியா வந்திருப்பார்கள் என்றால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இந்த சட்டம், முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறியும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

.