நாட்டுப்புற இசையை பிரபலப்படுத்தும் கீதா ரபாரியின் முயற்சிகள் ஈர்க்கப்படுவதாக மோடி ட்வீட்.
NEW DELHI: குஜராத்தி பாடகி ஒருவர் பிரதமர் மோடிக்காக நாட்டுப்புற பாடல் ஒன்றை அர்ப்பணித்த நிலையில், அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், நாட்டுப்புற இசையை பிரபலப்படுத்தும் கீதா ரபாரியின் முயற்சிகளால் தான் ஈர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கீதா ரபாரி போன்றவர்கள் நம் சமுதாயத்தை உற்சாகப்படுத்துகிறார்கள். ஒரு எளிமையான பின்னணியைச் சேர்ந்த அவர், பாடும் ஆர்வத்தை அர்ப்பணிப்புடன் பின்தொடர்ந்து சிறந்து விளங்கி வருகிறார். குஜராத்தி நாட்டுப்புற இசையை இளைஞர்களிடையே பிரபலப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், ”என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கீதா ரபரி, குஜராத் நாட்டுப்புற இசை பாடல்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், பல்வேறு கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கீதா, தான் பாடிய பாடல் ஆல்பத்தினை பிரதமர் மோடிக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பிரதமரை நேற்று நேரில் சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார்.
இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவத்திற்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடிக்காக தான் அர்ப்பணித்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, பிரதமரை சந்திக்க திட்டமிட்டதாக கூறியுள்ளார். அவர் குழந்தையாக இருக்கும் போதே பிரதமரை சந்தித்ததையும் நினைவு கூர்ந்தார்.
அப்போது, பள்ளி ஆண்டு விழா ஒன்றில் கலந்துக் கொண்டதாகவும், அதில் பங்கேற்ற மோடி ரூ.250 கொடுத்து தன்னை கவுரவித்ததாகவும் கூறினார். மேலும், எனது குரல் நன்றாக இருப்பதாகவும் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளுமாறும் கூறினார்.
தற்போது இந்த குஜராத்தி பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி எனக்கு தந்தை போன்றவர் என்று அவர் கூறினார்.