டெல்லி வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- டெல்லி வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்
- மோடி தலைமையில் அமைச்சரவை கூடி முக்கிய முடிவை எடுக்கவுள்ளது
- டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது
New Delhi: டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் வன்முறையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் அங்கு அமைதியை நிலை நிறுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
அமைதியும், நல்லிணக்கமும்தான் நம்முடைய பண்பாடு. டெல்லியில் அமைதியை நிலை நிறுத்துமாறு நான் என் சகோதர சகோதரிகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதி விரைவில் டெல்லியில் அமைதியைக் கொண்டுவருவது என்பது மிகவும் அவசியமாக உள்ளது.
டெல்லி வன்முறை தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தினோம். இயல்பு நிலையைக் கொண்டு வருவதற்காக போலீஸ் மற்றும் இதர பாதுகாப்பு அமைப்புகள் களத்தில் தீவிரமாக பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அதன் எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த ஞாயிறன்று வன்முறை வெடித்தது. கல்வீச்சு, தடியடிகளுடன் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதால் தலைநகர் டெல்லி போர்க்களமாக மாறியது.
கடந்த 3 நாட்களாக நடந்து வரும் வன்முறையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையே பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று கூடி டெல்லி வன்முறை விவகாரம் குறித்து இறுதி முடிவை எடுக்கவுள்ளது. முன்னதாக நேற்று, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.