This Article is From Jun 19, 2019

'ஒரே தேசம் ஒரே தேர்தல்' சாத்தியமா? - ஆய்வு செய்ய கமிட்டியை அமைக்கிறார் பிரதமர்!!

ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இதற்கு பாஜகவுக்கு மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பலம் தேவை.

'ஒரே தேசம் ஒரே தேர்தல்' சாத்தியமா? - ஆய்வு செய்ய கமிட்டியை அமைக்கிறார் பிரதமர்!!

அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

ஹைலைட்ஸ்

  • மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது
  • 5 எதிர்க்கட்சிகள் மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை
  • ஓரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
New Delhi:

பிரதமர் மோடியின் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் 'ஒரே தேசம் ஒரே தேர்தல்' திட்டம் நடைமுறையில் சாத்தியமா என்பதை ஆய்வு செய்வதற்கு கமிட்டி விரைவில் அமைக்கப்படவுள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த தகவலை தெரிவித்தார். 

பெரும்பாலான கட்சிகள் மோடியின் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார். பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தை முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி ஆகியை இந்த கூட்டத்தை புறக்கணித்தன. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், தெலங்கான முதல்வர் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகியவற்றின் சார்பாக பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பது மத்திய பாஜக அரசின் திட்டம் இல்லை என்றும், அது நாட்டின் எதிர்பார்ப்பு என்றும் கூறினார். 

ஒரே தேசம் ஒரே தேர்தல் முறையை கொண்டுவந்தால் பணம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்று மத்திய பாஜக அரசு தெரிவிக்கிறது. இருப்பினும், இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. கூட்டாட்சி தத்துவத்திற்கு இந்த முறை எதிரானது என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

ஒரே தேசம் ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்வதற்கு பாஜகவுக்கு மாநிலங்கள் அவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் இந்த முறை நடைமுறைக்கு வருவதில் சிக்கல்கள் இருக்கின்றன. 

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேவைதானா என்பது குறித்து விவாதித்திருந்தால் அதில் கலந்து கொண்டிருப்பேன் என்று கூறியுள்ளார். மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மாயாவதி, வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று எச்சரித்துள்ளார். 

.