வெள்ள பாதிப்பை பிரதமர் மோடி பார்வையிடும் காட்சி.
Bhubaneswar/ New Delhi: ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். தனி விமானம் மூலமாக பார்வையிட்ட பிரதமர், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கவர்னர் கணேஷிலால் ஆகியோரிடம் வெள்ள பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.
இதன்பின்னர் ஃபனி புயல் பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘நவீன் பட்நாயக் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். இதேபோன்று அரசு தெரிவித்த அறிவுரைகளை ஒடிசா மக்களும் சரியான முறையில் பின்பற்றியுள்ளனர். இது பாராட்டுதலுக்கு உரியது' என்று கூறினார்.
பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் காட்சியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
1,500-க்கும் அதிகமான பேருந்துகள் மக்களை இடமாற்றும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. அவர்களுடன் தன்னார்வலர்களும் இரவு பகலாக பணியாற்றி, பெரும் சேதத்தை தவிர்த்தனர்.
ஃபனி புயல் பாதிப்புக்கு பின்னர் ஒடிசாவின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சம்பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 5 ஆயிரம் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன.
முன்னதாக மிகத் துல்லியமான அறிவிப்புகளை வெளியிட்டது என்று கூறி இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தை ஐ.நா. பாராட்டியது. இதுகுறித்து ஐ.நா.வின் செய்தி தொடர்பாளர் டெனிஸ் மெக்லீன், ‘மிகத் துல்லியமான வானிலை அறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. துல்லியமான கணிப்பால்தான் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்' என்று தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஃபனி புயல் சக்தி மிக்கதாக இருந்தது. 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் மின் கம்பங்களும், மரங்களும் ஆயிரக்கணக்கில் சாய்ந்துள்ளன.
ஃபனி புயல் நிவாரண உதவியாக மத்திய அரசு ரூ. 1,000 ஆயிரத்தை ஒடிசாவுக்கு வழங்கியுள்ளது. இதேபோன்று மேற்கு வங்கமும், ஆந்திராவும் புயலால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
(With inputs from ANI, PTI)