கொரோனா தொடர்பாக இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
ஹைலைட்ஸ்
- நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் மோடி
- மார்ச் 20 அன்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
- அப்போது, 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தினார்.
New Delhi: கொரோனா அச்சுறுத்தல் குறித்து இன்று நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில், கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக இன்று, இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.
ஏற்கனவே, சர்வதேச விமானங்கள், பயணிகள் ரயில்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவை மார்ச்.31ம் தேதி வரை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசு உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதித்து கடுமையாக கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அன்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். யாரும் தேவையில்லாமல் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.
இதேபோல், நேற்றைய தினம் பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து இருந்தார். பலரும் ஊரடங்கு உத்தரவுகளைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்.
அரசின் உத்தரவுகளை முறைப்படி பின்பற்றுங்கள். மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்,” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.