“நான் இவ்வளவு தொலைவில் இருக்கும் இந்நேரத்தில் எனது நண்பர் அருண், இயற்கை எய்திவிட்டார்” என்று உருகினார் மோடி.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி, 3 நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இந்தியா வந்தார். அவர் நாட்டுக்கு வந்த ஒரு சில மணி நேரத்திலேயே மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்தார். ஜெட்லி, 3 நாட்களுக்கு முன்னர் இயற்கை எய்தினார்.
பிரான்ஸ் - ஐக்கிய அரபு அமீரகம் - பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் மோடி. அந்தப் பயணத்தில் இருக்கும்போதுதான், ஜெட்லி இறந்த செய்தி வந்தது. அவர் ஜெட்லியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்து கொள்ள நாட்டுக்குத் திரும்பிவிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர் தனது சுற்றுப் பயணத்தைப் பாதியில் நிறுத்திக் கொள்ளக் கூடாது என்று ஜெட்லி குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஜெட்லிக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெற்கு டெல்லியில் இருக்கும் அருண் ஜெட்லி வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்திடம் துக்கம் விசாரித்தனர்.
ஜெட்லி மறைந்ததைத் தொடர்ந்து ட்விட்டரில் பிரதமர் மோடி, “பாஜக-வுக்கும் அருண் ஜெட்லிக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்தது. அவசர நிலை காலக்கட்டத்தில் மாணவ அமைப்பின் தலைவராக இருந்த ஜெட்லி, ஜனநாயகத்தைக் காக்கப் போராடினார். எங்கள் கட்சியின் மிகவும் பிரபலமான தலைவராக அவர் உருவெடுத்தார். எங்கள் கட்சியின் கொள்கைகளை பெரும் சமூகத்துக்குக் கடத்தும் திறன் அவரிடம் இருந்தது” என்றார்.
பஹ்ரைனில் நடந்த பொது நிகழ்ச்சியிலும் அருண் ஜெட்லி மறைவு குறித்து கலங்கினார் மோடி. “நான் இவ்வளவு தொலைவில் இருக்கும் இந்நேரத்தில் எனது நண்பர் அருண், இயற்கை எய்திவிட்டார்” என்று உருகினார் மோடி.
மேலும் அவர், “பணியை முதன்மையாகக் கொண்ட மனிதன் நான். பஹ்ரைனில் மிகவும் நல்ல சூழல் இருக்கும் இந்நேரத்தில், நாம் ஜன்மாஷ்டமியைக் கொண்டாடும் இந்நேரத்தில் என் மனதில் பெரும் வருத்தம் உள்ளது. பொது வாழ்க்கையில் நான் கை கோர்த்து நடந்த நண்பர், அரசியல் வாழ்க்கையில் ஒன்றாக பயணம் செய்த நண்பர், எப்போதும் தொடர்பிலிருந்த நண்பர், போராட்டங்களை ஒன்றாக என்னுடன் எதிர்கொண்ட நண்பர், அந்த நண்பர் அருண் ஜெட்லி, முன்னாள் ராணுவ மற்றும் நிதி அமைச்சர், இன்று காலமானார்” என்று உருக்கமாக பேசினார் மோடி.