ராகுல் காந்தி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
New Delhi: காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி 'தி ஹிந்து' நாளிதழில் வெளியான ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை செய்து எழுதப்பட்ட கட்டுரையை வரவேற்றுப் பேசியுள்ளார். அந்தக் கட்டுரையில், 'ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான பாதுகாப்பு துறையில் பிரதமரின் தலையீடு மற்றும் ரபேல் ஒப்பந்தத்தில் பிரான்ஸின் பங்கு' குறித்து ஆவணங்கள் வெளியிடப்பட்டு, கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமோ, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை கோரப்பட்டபோது, 'அதற்கான எந்த மூகாந்திரமும் இல்லை' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல், 'ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, யாருக்கு மோடி சாதகமாக நடந்துள்ளார் என்று நினைக்கிறீர்கள். எனக்கோ, உங்களுக்கோ அவர் பாடுபடவில்லை. அனில் அம்பானிக்காகத்தான் அவர் ஒப்பந்தத்தின் தன்மையையே மாற்றியுள்ளார். பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியின் மூலம், மோடி ஒரு திருடர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது' என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ், தொடர்ச்சியாக பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகத்தில் தலையீடு குறித்து ஆட்சேபணைகளை தெரிவித்து வந்தது. அதை மத்திய அரசு சற்றும் பொருட்படுத்தாமல் இருந்தது.
நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, “எந்த நம்பிக்கையில் இவர்கள் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பொய் பேசுகிறார்கள் என்று நான் ஆச்சர்யப்பட்டேன். அவர்கள் இப்படி ரஃபேல் குறித்து அவதூறாக பேசுவதற்குக் காரணம், அவர்கள் ஆட்சிக் காலத்தில் நேர்மையான ஒரு ஒப்பந்தம் கூட பாதுகாப்பு அமைச்சகத்தில் நடக்கவில்லை என்பதால்தான்" என்று கூறினார்.