PMC Bank scam: பிஎம்சி வங்கி வாடிக்கையாளரான சஞ்சய், ஏற்கனவே ஜெட் ஏர்வேஸில் வேலையையும் இழந்துள்ளார்.
Mumbai: மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு (PMC) வங்கியியில் ரூ.90 லட்சம் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், மனஅழுத்தத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் மும்பை நீதிமன்றம் முன்பாக, வங்கியில் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
இதுதொடர்பாக பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்த மற்றொரு வாடிக்கையாளரான மணாலி நார்கார் கூறும்போது, நேற்று காலை மும்பை நீதிமன்றம் முன்பாக பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர்கள் கூட்டாக போராட்டத்தில ஈடுபட்டிருந்தோம்.
இந்த போராட்டத்தில், சஞ்சய் குலாத்தியும் (51), பங்கேற்றிருந்தார். அவரது சேமிப்பு பணம் முடங்கியதால் மிகுந்த மன அழுத்தத்துடன் சஞ்சய் காணப்பட்டார் என்றவர், இன்று மாலை அவருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த உள்ளோம் என்றார்.
இந்த போராட்டத்திற்கு சஞ்சய் தனது 80வயது தந்தையுடன் சென்றுள்ளார். போராட்டத்தை முடித்து வீடு திரும்பிய அவர், இரவு உணவு உட்கொள்ளும்போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியிடம் வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் (ஹெச்டிஐஎல்) ரூ.4,355 கோடி அளவுக்கு கடன் வாங்கியது. ஆனால், அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், கடன் விவரத்தை ரிசர்வ் வங்கியிடமிருந்து மறைத்து விட்டனர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின்போது, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ், வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங், வங்கியின் முன்னாள் தலைவர் வாரியம் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஎம்சி வங்கி முறைகேடு தொடர்பாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை ரூ.3,830 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டும், அடையாளம் கண்டறியப்பட்டும் உள்ளன என்று அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
இந்த சொத்துகள், ஹெச்டிஐஎல் நிறுவனத்துக்கும், அதன் தலைவர்கள், இயக்குநர்கள், பிஎம்சி வங்கியின் உயரதிகாரிகள் ஆகியோருக்கும் சொந்தமானவை. மேலும் சொத்துகளை அடையாளம் காணும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.