PMC Bank Scam: முரளிதர் (83), பிஎம்சி வங்கியில் ரூ.80 லட்சம் டெபாசிட் செய்து வைத்துள்ளார்.
Mumbai: மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு (PMC) வங்கியால் மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முரளிதர் (83) என்பவர் பிஎம்சி வங்கியில் ரூ.80 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். எனினும், ரிசர்வ் வங்கியின் கட்டுபாடுகள் காரணமாக அவரது மருத்துவ செலவுகளுக்காக அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. முரளிதரருக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் முயற்சித்தும் அவர்களால், பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பி.எம்.சி வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துள்ளவர்கள் உயிரிழந்துள்ளது இது நான்காவது நிகழ்வாகும். டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள் ரூ.40,000 மட்டுமே எடுக்க முடியும். முன்னதாக, பிஎம்சி வாடிக்கையாளர்கள் மாரடைப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் ஒரு பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி, மருத்துவ அவசர தேவைகளுக்கு விதிவிலக்குகள் உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஆனால் குடும்பத்தின் கோரிக்கையை வங்கி மறுத்ததா என்பது குறித்த தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை.
முதலில் டெபாசிட் செய்த தொகையில் ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும் என்று ஆர்பிஐ கடும் கட்டுபாடுகள் விதித்திருந்த நிலையில், பின்னர் அதனை ரூ.40,000-ஆக உயர்த்தி 3 முறையாக அதனை பிரித்து எடுத்துக்கொள்ளலாம் என்றது.
கடந்த செப்.23ம் தேதி முதல் பிஎம்சி வங்கியில் பணத்தை எடுக்க வாடிக்கையாளர்களுக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தது ஆர்பிஐ. இதனிடையே முரளிதரருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், அந்த குடும்பத்தினரால் சிகிச்சைக்கான பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் போனது.
கடந்த திங்கள்கிழமையன்று, மும்பை நீதிமன்றம் முன்பாக, பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்திருந்த வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர். இந்த போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய சஞ்சய் குலாத் என்பவர் அன்று இரவே மாரடைப்பால் மரணமடைந்தார்.
முன்னதாக, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியிடம் வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் (ஹெச்டிஐஎல்) ரூ.4,355 கோடி அளவுக்கு கடன் வாங்கியது. ஆனால், அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், கடன் விவரத்தை ரிசர்வ் வங்கியிடமிருந்து மறைத்து விட்டனர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின்போது, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.