This Article is From Jan 21, 2020

'இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம்தான் பொங்கியிருக்கிறது' : ராமதாஸ்

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையையொட்டி கடந்த ஆண்டை விட டாஸ்மாக் மதுபான விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

'இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம்தான் பொங்கியிருக்கிறது' : ராமதாஸ்

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் மது விற்பனை ரூ. 600 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் திருநாளில் புதுப்பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்கல் தான் பொங்கும்.ஆனால், இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது என்று மதுவிற்பனையை சுட்டிகாட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

பொங்கல் விடுமுறையையொட்டி மதுபான விற்பனை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

பொங்கல் திருநாளில் புதுப்பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்கல் தான் பொங்கும்.ஆனால், இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது. முதல் பொங்கல்வயிற்றை நிறைக்கும்.இரண்டாவது பொங்கல் வயிற்றை அரிக்கும். தமிழா நீ மதுவை கைவிட்டு தலைநிமிர்வது எந்நாளோ?

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவையொட்டி ரூ.605 கோடிக்கு மது விற்பனை. வரலாற்று சாதனையாம். ஆஹா.... இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் குடிப்பதில் சாதனைகளை மட்டும் தான் படைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்களாம். அடக் கொடுமையே? 

தமிழ்நாட்டில்  பொங்கல் விழாவின் 3 நாட்களில்  ரூ. 605 கோடிக்கு மது விற்பனை: செய்தி - கரும்பு விற்பனையாகவில்லை... இஞ்சி, மஞ்சள் கொத்துகளை வாங்க ஆள் இல்லை. மதுக்கடைகளில் மட்டும் மாநாட்டுக் கூட்டம். தமிழன் என்றொரு இனமுண்டு... தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பார்களே.... அது இது தானோ?

இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில்  ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும். இந்த அவலம் என்று தீரும்?
இவ்வாறு ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 14-ம் தேதி ரூ.178 கோடியே 44 லட்சம், 15-ம் தேதி ரூ.253 கோடியே 39 லட்சம், 17-ம் தேதி ரூ.174 கோடியே 89 லட்சம் என மொத்தம் ரூ.606 கோடியே 72 லட்சத்துக்கு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதத்துக்கு அதிகமாக விற்பனை ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் முடிகிறது. இந்த 2 நாட்களில் சுமார் ரூ.380 கோடி வரை மது விற்பனை ஆகும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் பார்க்கும்போது, பொங்கல் பண்டிகை விடுமுறையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தம் ரூ.986 கோடிக்கு மேல் மது விற்பனை ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

.