This Article is From Feb 19, 2019

தமிழகத்தில் அதிமுக – பாஜக - பாமக கூட்டணி : இழுபறியில் தேமுதிக

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக ஆளும் கட்சியான அதிமுக-வின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற உள்ளது.

தமிழகத்தில் அதிமுக – பாஜக - பாமக கூட்டணி : இழுபறியில் தேமுதிக

அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் அணி வகுத்து நிற்கின்றன

ஹைலைட்ஸ்

  • ராமதாஸ்- எடப்பாடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
  • தொகுதி பங்கீடு குறித்து தகவல் வெளியானது
  • ஒப்பந்தம் கையெழுத்தான போது அன்புமணி உடனிருந்தார்

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக ஆளும் கட்சியான அதிமுக-வின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற உள்ளது. அதற்கான ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. 

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய ஜனநாகயக கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமெரிக்கா சென்றிருந்தார். அவர் இரு தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். அவரை பாஜக-வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சந்திக்கிறார். தேமுதிக, அதிமுக அணியில் இணைவது குறித்தும் இன்று அதிகாரபூர்வ தகவல் வரும் என்று தெரிகிறது. 

மேலும் படிக்க - அதிமுக-பாமக கூட்டணியின் உடன்படிக்கையில் உள்ளது என்ன..?- முழு விவரம்

பாமக-வைப் பொறுத்தவரை கடந்த சில தினங்களாக அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதே நேரத்தில் திமுக அணியில் பாமக சேரவும் வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் திமுக அணியில் இடம் பெற்றிருக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், பாமக அணி சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக-வில் பாமக இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாமக, 7 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், 'அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு கொடுக்கும்' என்றார்.

அதிமுக கூட்டணியில் மீதம் இருக்கும் கட்சிகள், இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இறங்கவில்லை. அப்போது மீண்டும் ஒரு அரசியல் களேபரம் அரங்கேறலாம். 

அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் அணி வகுத்து நிற்கின்றன. திமுக கூட்டணியிலும் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. 

மேலும் படிக்க - மக்களவை தேர்தல் : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி! இறுதி செய்ய அமித் ஷா சென்னை வருகை

.