"நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் 266 பேர் உயிரிழந்தனர்"
ஹைலைட்ஸ்
- உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஆனது அமெரிக்கா
- நியூயார்க்கில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது
- இத்தாலியைவிட மோசமான நிலையில் அமெரிக்கா
கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா, இத்தாலியை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா தற்போது முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவின் நிலையை இப்படி இருக்கையில் இந்தியாவின் நிலை என்னவாகும் இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
உலகளவில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பணக்கார நாடுகளில் கூட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், பல கோடி பேரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், கொரோனா பாதிப்புக்கு 23,293 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவில் 1,178 பேர் உயிரிழந்துள்ளனர்.
“நிதி, விஞ்ஞானம், மருத்துவம், மருந்துகள் மற்றும் ராணுவம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், எங்களது குடிமக்களைப் பாதுகாக்கவும் நாங்கள் போர் நடத்தி வருகிறோம்,” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
சுமார் 40 சதவிகித அமெரிக்க மக்கள் ஊரடங்கு உத்தரவுகளின் கீழ் உள்ளனர். தொடர்ந்து, குடிமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதன் மூலம் தங்கள் பங்கைச் செய்யுமாறு டிரம்ப் வலியுறுத்தினார்: "வீட்டிலேயே இருங்கள், சற்று ஓய்வெடுங்கள், வீட்டிலேயே இருங்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 17,941 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இத்தாலி, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் 266 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,268-ஆகவும், உயிரிழப்பு 1,178 ஆகவும் அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முன்னணியில் இருந்த சீனா, இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
இந்நிலையில் இது குறித்து அச்சம் எழுப்பியுள்ள ராமதாஸ், “கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை அமெரிக்கா மிஞ்சியிருக்கிறது. சீனாவில் இதுவரை 81,285 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 85,268 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கே இந்த நிலை எனும் போது நமது நிலை? எனவே விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம்,” என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் ட்வீட்டரில் கருத்திட்டுள்ளார்.