This Article is From May 18, 2020

தமிழக தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ரகசியத் தேர்வா..? - ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு

"அனைவருக்கும் தேர்ச்சி வழங்க அரசே ஆணையிட்ட பிறகும் தனியார் பள்ளிகள் தேர்வு நடத்தப்போவதாக அறிவித்திருப்பது..."

Advertisement
தமிழ்நாடு Written by

"9-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு  தேர்வு நடத்துவதை தனியார் பள்ளிகள் கைவிட வேண்டும்”

Highlights

  • தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு
  • தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
  • அறிவிப்பை மீறும் வகையில் தனியார் பள்ளிகள் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு

கொரோனா பரவல் தீவிரமாகியுள்ள நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் தமிழக அரசு, 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் நடப்புக் கல்வியாண்டில், இறுதியாண்டு தேர்வின்றி தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை சில தனியார் பள்ளிகள் மீற திட்டமிட்டு வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர், “கொரோனா அச்சம் காரணமாக 9ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க அரசு ஆணையிட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறந்தபிறகு தேர்வு நடத்தி தான் தேர்ச்சி அளிக்கப்படும் என சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

அனைவருக்கும் தேர்ச்சி வழங்க அரசே ஆணையிட்ட பிறகும் தனியார் பள்ளிகள் தேர்வு நடத்தப்போவதாக அறிவித்திருப்பது மாணவர்களிடையே தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தி விடும். இது தேவையற்றது. எனவே, 9-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு  தேர்வு நடத்துவதை தனியார் பள்ளிகள் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்தார். அதேபோல, 12 ஆம் வகுப்பு கடைசித் தேர்வை எழுதாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழகம் இன்னும் மீண்டு வராத நிலையில், அவசர அவசரமாக 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு வைக்கப்படுவது குறித்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகிறார்கள். 

Advertisement
Advertisement