இந்தியா - சீனா உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- லடாக் எல்லை மோதல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடந்தது
- பிரதமர் மோடி பேசியது தவறாக பரப்பப்படுவதாக அவரது அலுவலகம் விளக்கம்
- லடாக் சம்பவத்தால் இந்தியா - சீனா உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
New Delhi: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது தவறாக பரப்பப்படுகிறது என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் சீன வீரர்கள், இரும்பு கம்பிகள், கற்கள் மூலம் இந்திய ராணுவத்தினரை தாக்கினர். இதில் தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தார்கள்.
இதன்பின்னர் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மீண்டும் பதற்றம் ஏற்படும் வகையில் எந்த நடவடிக்கையையும் இரு நாடும் மேற்கொள்ளாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
“சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை.எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனாவின் நடவடிக்கை ஒட்டு மொத்த தேசத்தையும் காயப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது. நமது நாட்டை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும் .ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது.
இந்திய வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்த விவகாரத்தில் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். நமது படை வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜ்ய ரீதியிலும் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக சீனாவிடம் எடுத்துரைத்துள்ளோம். இந்தியா அமைதி மற்றும் நட்பை விரும்புகிறது. அதேவேளையில், இறையாண்மையை காப்பதற்குத்தான் உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்படும்” என்று பேசினார்.
இந்த நிலையில், பிரதமர் நேற்று பேசியது தவறாக பரப்பப்பட்டு வருவதாக பிரதமர் அலுலகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய ராணுவத்தின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது என்றும் கூறப்பட்டுள்ளது.