மறைந்த தமிழக முதுல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை போயஸ் கார்டனில் இல்லம் உள்ளது. வேதா நிலையம் என்று அழைக்கப்படும் அதனை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
''சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக வேதா நிலையம் முடக்கப்பட்டு விட்டது. அப்படிப்பட்ட இடத்தை நினைவிடமாக மாற்றினால் அது தவறான உதாரணமாக மாறிவிடும். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேதா இல்லத்தில் தங்கியிருந்தனர். எனவே நினைவிடமாக அதனை மாற்றுவதை ரத்து செய்ய வேண்டும்'' என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விதிகளுக்கு உட்பட்டுதான் நினைவிடம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு விவகாரத்தில் போயஸ் இல்லமும் வருவதால், வருமான வரி பாக்கி ஏதும் இருக்கிறதா என்று வருமான வரித்துறையிடம் சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டது.
இதற்கு வருமான வரித்துறை அளித்திருக்கும் பதிலில், ''ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் 2007 மார்ச் 13-ம்தேதி முடக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 3 இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துவரி மற்றும் வருமானவரி பாக்கி என்ற வகையில் ரூ. 16.73 கோடி நிலுவையில் இருப்பதால் சொத்துகளை முடக்கியுள்ளோம். அதனை அளித்தால் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஆட்சேபனை ஏதும் இல்லை'' என்று தெரிவித்தது.