This Article is From Nov 05, 2019

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

திருவள்ளுவர் சிலையின் மீது மர்ம நபர்கள் சிலர் மாட்டு சாணத்தை வீசியும், கண்களில் கருப்பு பேப்பரால் மறைத்தும் சென்றுள்ளனர்.

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசிய அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.  

நேற்று முன்தினம் நள்ளிரவில் தஞ்சையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் மீது மர்ம நபர்கள் சிலர் மாட்டு சாணத்தை வீசியும், கண்களில் கருப்பு பேப்பரால் மறைத்தும் சென்றுள்ளனர். இதனை நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

தொடர்ந்து, இந்த தகவல் சுற்றுவட்டார பகுதியில் பரவியதையடுத்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வல்லம் டிஎஸ்பி சீத்தாராமன் மற்றும் தமிழ் பல்கலைக்கழக போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த சம்பவத்தை கண்டித்தும், மர்மநபர்களை உடனே கைது செய்ய கோரியும் திருவையாறு தொகுதி எம்எல்ஏவும், தஞ்சை  தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான துரை.சந்திரசேகரன், தஞ்சை எம்எல்ஏ நீலமேகம் மற்றும் திருவள்ளுவர் பேரவையினர் திருவள்ளுவர் சிலை அருகே ஒன்று திரண்டனர். சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். 

இதைத்தொடர்ந்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

முன்னதாக, தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பதிவில், கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின், கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?

அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. 

இந்த பதிவில், திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற படத்தையும் பாஜக வெளியிட்ட நிலையில் அதனை திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

.